100 கோடி டாலர் இலக்கு..!!
டாடா குழும நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் வருவாயில் நகைகள் சுமார் 90% பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வந்தாலும், டைட்டனின் கைக்கடிகாரங்கள் மற்றும் கேரட்லேன் வணிகங்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன என்றும், அடுத்த சில ஆண்டுகளில் 100 கோடி டாலர் வருவாய் இலக்கை எட்டும் நிலைக்கு மிக அருகில் உள்ளன என்று நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
நுகர்வோர் விலை அடிப்படையில், கைக்கடிகாரங்கள் அந்த மைல்கல்லை எட்டுவதற்கான பாதையில் உறுதியாக உள்ளன என்று சி.கே. வெங்கடராமனிடமிருந்து நிர்வாக இயக்குநர் பொறுப்பை ஏற்கும் அஜோய் சாவ்லா கூறினார்.
“நுகர்வோர் விலை அடிப்படையில், கைக்கடிகாரங்கள் நிச்சயமாக அந்த 100 கோடி டாலர் இலக்கை எட்டுவதற்கான பாதையில் உள்ளன. இதற்கு பிரீமியம் தயாரிப்புகளின் வளர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும், எங்கள் பிராண்டுகளின் தொகுப்பு மூலம் ஏற்படும் விற்பனை அளவு வளர்ச்சியும் ஒரு காரணம். டைட்டன் மட்டுமல்லாமல், ஃபாஸ்ட்ராக், சொனாட்டா போன்ற பிராண்டுகளும், மேலும் டைட்டன் வேர்ல்ட், ஹீலியோஸ் லக்ஸ் மற்றும் ஃபாஸ்ட்ராக் கடைகள் போன்ற விற்பனை வழிகளும் இதற்குப் பங்களிக்கின்றன” என்று அதன் புதிய எம்.டியான அஜோய் சாவ்லா கூறியுள்ளார்.
2024-25 நிதியாண்டில், டைட்டனின் கைக்கடிகார வணிகம் ஆண்டுக்கு ஆண்டு 17.2% வளர்ச்சி கண்டு, ரூ.4,576 கோடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் கேரட்லேன் ரூ.3,583 கோடி வருவாயைப் பதிவு செய்தது. நகைகள் பிரிவு நிறுவனத்தின் மிகப்பெரிய வணிகமாகத் தொடர்ந்தது, முந்தைய ஆண்டை விட 21.4% அதிகரித்து ரூ.46,571 கோடி வருவாயை ஈட்டியது. டைட்டன் கைக்கடிகாரங்களின் சராசரி விலை, கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும், சுமார் ரூ.3,000-ரூ.4,000-லிருந்து ரூ.8,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் சாவ்லா கூறினார். இது அதிக மதிப்புள்ள தயாரிப்புகளை நோக்கிய ஒரு நிலையான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கைக்கடிகாரப் பிரிவு தற்போது பல்வேறு வடிவங்களில் 1,259 கடைகளை இயக்கி வருகிறது.
2025 நிதியாண்டில், டைட்டன் 22% வருவாய் வளர்ச்சியுடன் ரூ.57,818 கோடியைப் பதிவு செய்தது. இந்தக் காலகட்டத்தில் தங்க விலை உயர்வு போன்ற சவால்களை எதிர்கொண்டது. அதிக விலைகள், ரூ.1 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள நகைகளின் வாங்குவோர் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் 18K, 14K மற்றும் 9K தங்கத்தில் உள்ள புதிய வடிவமைப்புகளின் உதவியால் மதிப்பு வளர்ச்சி வலுவாக இருந்தது..
