பெரிய Deal Waiting???
சந்தை மதிப்பு மற்றும் வருவாயின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்கனான் நிறுவனத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆர்கனான் நிறுவனம் பெண்களின் ஆரோக்கியத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் என்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் பயோசிமிலர்கள் துறையிலும் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. சன் நிறுவனம் ரான்பாக்ஸியை கையகப்படுத்திய கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடன் தொகையையும் சேர்த்து சுமார் 1,000 கோடி டாலர் மதிப்புடைய இந்த ஒப்பந்தம், தனது கூர்மையான பேரத் திறனுக்காக அறியப்பட்ட சன் நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷாங்க்விக்கு மிகவும் துணிச்சலான கையகப்படுத்தும் முயற்சியாக இருக்கும்.
ஆர்கனான் நிறுவனம் 2021-ல் MSD (மெர்க் ஷார்ப் & டோஹ்ம்) நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 950 கோடி டாலர் கடனைப் பெற்றது. 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் ஆர்கனான் நிறுவனத்திற்கு 890 கோடி டாலர் கடன் இருந்தது.
நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 228 கோடி டாலராக இருந்தது. வெள்ளிக்கிழமை அன்று அதன் பங்கு விலை 8.76 டாலராக முடிவடைந்தது.
2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், ஆர்கனான் நிறுவனத்தின் மொத்த வருவாய் 160 கோடி டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 1% அதிகமாகும். 2024 நிதியாண்டில் 640 கோடி டாலர் வருவாயையும், 195 கோடி டாலர் ஈபிஐடிடிஏ-வையும் ஈட்டியது.
தற்போதைய சந்தை மதிப்பு 4,500 கோடி டாலராக கொண்ட சன் நிறுவனம், 2025 நிதியாண்டில் ரூ. 52,041 கோடி (619 கோடி டாலர்) வருவாயை ஈட்டியது. அதன் EBITDA 17.3% அதிகரித்து ரூ. 15,300 கோடியாக (182 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.
ஆர்கனான் நிறுவனம் அதன் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை முடுக்கிவிட்டதிலிருந்து, சன் நிறுவனம் ஆர்கனான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
