பிரேசிலில் புதிய மோட்டார் சைக்கிள் அசெம்பிளி ஆலையைத் திறந்த பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோவுக்குச் சொந்தமான ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் பிராண்டான கேடிஎம், பிரேசிலின் மனௌஸில் ஒரு புதிய அசெம்பிளி ஆலையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது ‘கம்ப்ளீட்லி நாக்-டவுன்’ (CKD) முறையில் இயங்கும் ஆலை ஆகும், இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 20,000 யூனிட்டுகள் ஆகும்.
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய பிராண்டுகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், மோட்டோகிராஸ், என்டுரோ மற்றும் அட்வென்ச்சர் ஆகிய பிரிவுகளின் கீழ் பத்து வெவ்வேறு மாடல்கள் தயாரிக்கப்பட உள்ளன.
பிரேசிலில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா செயல்பாடுகளை மறுசீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்த புதிய ஆலை திறக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 3,500 யூனிட்டுகளை அசெம்பிள் செய்யவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆலையின் வசதிகள் மற்றும் உபகரணங்களுக்காக சுமார் 2 கோடி பிரேசிலிய ரியாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கேடிஎம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு முதல் டாஃப்ரா மோட்டோஸ் நிறுவனத்துடன் இணைந்து மனௌஸில் மோட்டார் சைக்கிள்களை அசெம்பிள் செய்து வந்தது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய சி.கே.டி (CKD) ஆலையின் மூலம், ஆஸ்திரியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் தனது இரண்டு பிராண்டுகளுக்காக பிரத்யேகமான, சுதந்திரமான உற்பத்திச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இதில் ஆஃப்-ரோடு போட்டி வாகனங்கள் முதல் அட்வென்ச்சர்-டூரிங் மாடல்கள் வரை அனைத்தும் அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பஜாஜ் ஆட்டோவின் இணை நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா கூறுகையில், “பஜாஜ் மற்றும் கேடிஎம் ஆகிய இரண்டின் உலகளாவிய சந்தையிலும் பிரேசில் ஒரு முக்கியமான இடமாகும். மனௌஸில் பஜாஜ் ஆட்டோ வசதிகளுடன் இணைந்து கேடிஎம் ஆலையைத் திறந்திருப்பது, பிரேசில் சந்தையின் மீது நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
இந்த ஆலையில் மோட்டோகிராஸ் பிரிவில் KTM 250 SX-F மற்றும் KTM 450 SX-F ஆகிய மாடல்களும், என்டுரோ பிரிவில் KTM 250 EXC-F, 350 EXC-F 6DAYS, 300 EXC மற்றும் 300 EXC 6DAYS ஆகிய மாடல்களும் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
