அதிரடி காட்டும் சிப்லா
இன்ஸ்பெரா ஹெல்த் சயின்ஸை ரூ.111 கோடிக்கு கையகப் படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா தெரிவித்துள்ளது.
இன்ஸ்பெரா ஹெல்த் சயின்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க சிப்லா உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக மும்பையை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், பங்கு சந்தை ஒழுங்குமுறை விதிமுறைகள் தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இன்ஸ்பெரா 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது குழந்தைகள் நல மருந்துகள் மற்றும் தனித்துவமான நல்வாழ்வு தயாரிப்புகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் இன்ஸ்பெராவின் குழந்தைகள் நல மருந்து மற்றும் நல்வாழ்வு தயாரிப்புகளின் விரிவான போர்ட்ஃபோலியோவை, சிப்லாவின் வலுவான விநியோக வலைப் பின்னல் மற்றும் செயல்பாட்டு திறன்களுடன் இணைத்து, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்ஸ்பெராவின் நிறுவன மதிப்பு சுமார் ரூ.120 கோடியாக உள்ளது என்று சிப்லா தெரிவித்துள்ளது.
செயல்பாடுகளுக்கான மூலதன தேவைகளை கணக்கிட்ட பிறகு, இன்ஸ்பெராவின் 100 சதவீத ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்ற முடியாத மீட்டுக் கொள்ளக்கூடிய முன்னுரிமைப் பங்குகளை வாங்குவதற்கு ரூ.110.65 ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
