பாரபட்சமாக நடக்கிறதா LIC ???
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதானி குழும நிறுவனங்களில் முக்கிய பங்குதாரராக உள்ள பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நிறுவனங்களின் நிர்வாக குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துள்ளதாக மின்ட் இதழ் அறிக்கை தெரிவிக்கிறது. ஏப்ரல் 1, 2022 முதல் எல்.ஐ.சியின் சுமார் 9,000 வாக்களிப்பு முடிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர் இதைக் கண்டறிந்தது.
ரிலையன்ஸ் மற்றும் அதானி நிறுவனங்களின் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள எல்.ஐ.சி, பல்வேறு இதர நிறுவனங்களின் இதே போன்ற தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளது ஒப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 2023 இல், முகேஷ் அம்பானியை RIL இன் நிர்வாக இயக்குநராக மீண்டும் நியமிக்க LIC வாக்களித்தது. அம்பானி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இருப்பினும், மார்ச் 2025 இல், TVS மோட்டார் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் மற்றும் நிர்வாக இயக்குநராக வேணு சீனிவாசன் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு LIC வாக்களிப்பதைத் தவிர்த்தது, வாக்களிப்பதில் இருந்து விலகியது.
ஜூன் 2024 இல், வழக்கறிஞர் ஹைக்ரீவ் கைதனை ரிலையன்ஸின் நிர்வாக குழுவில் ஒரு சுயாதீன இயக்குநராக நியமிப்பதற்கு LIC வாக்களித்தது.
ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்திய எரிசக்தி பரிவர்த்தனை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சுயாதீன இயக்குனர் ராஜீவ் குப்தாவை மீண்டும் நியமிப்பது குறித்து வாக்களிப்பதில் இருந்து LIC விலகி இருந்தது.
ராஜீவ் குப்தா ஒன்பது நிறுவனங்களின் நிர்வாக குழுவில் உறுப்பினராக உள்ளதால் அவருக்கு நேரம் போதாது என்ற அடிப்படையில் எல்.ஐ.சி இந்த நிலைபாட்டை எடுத்தது. ஆனால் எட்டு நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ள ஹைக்ரீவ் கைதானுக்கு ஆதரவு அளித்திருந்தது.
2023 நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 9,000 தீர்மானங்களில், 92%-க்கும் அதிகமான தீர்மானங்களுக்கு ஆதரவாக , LIC வாக்களித்தது. 6%இல் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தது. 2% க்கும் குறைவான தீர்மானங்களை நிராகரித்தது. அதானியின் சொந்தமான நிறுவனங்களில், 368 தீர்மானங்களில் 351 தீர்மானங்களை LIC அங்கீகரித்தது ; மீதமுள்ளவற்றில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தது. அதானியின் சொந்தமான நிறுவனங்களுக்கான எந்தத் தீர்மானத்தையும் அது நிராகரிக்கவில்லை.
RIL மற்றும் Jio Financial Services இல் மிகப்பெரிய பொது பங்குதாரரான LIC, கடந்த 14 காலாண்டுகளில் இரு நிறுவனங்களும் முன்வைத்த 63 பங்குதாரர் தீர்மானங்களையும் அங்கீகரித்தது. ஆனால் மற்ற நிறுவனங்களில் இதே போன்ற திட்டங்களில் வாக்களிப்பதில் இருந்து நிராகரித்தது அல்லது விலகியதாக இந்த அறிக்கை கூறுகிறது.
