IT நிறுவனங்களுக்கு ஹாப்பி நியூஸ்..!!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்திருப்பது, இந்தியாவின் $28,300 கோடி தகவல் தொழில்நுட்ப (IT) துறைக்கு உற்சாகம் அளித்துள்ளது.
புதன் அன்று டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 90.29 ஆகக் குறைந்து 90.19 இல் முடிவடைந்தது. இது 2025-26 நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து 5.4% சரிவைக் குறிக்கிறது. ஐ.டி துறை இதன் மூலம் பயனடைகிறது. அதன் ஏற்றுமதிகள் டாலரில் நடப்பதால், இந்திய ரூபாயில் அதன் வருவாய் அளவு அதிகரிக்கிறது. இதற்கு நேர்மாறாக, இறக்குமதியாளர்கள் தங்கள் டாலர் கொள்முதல்களுக்கு அதிக ரூபாய்களை செலவிட வேண்டும்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், HCL டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் 40%-க்கும் அதிகமாக அமெரிக்காவிலிருந்து பெறுகின்றன. இதற்காக அவர்களுக்கு டாலர்களில் வருமானம் கிடைக்கிறது. அதிக மதிப்புள்ள டாலர் இந்தத் துறைக்கு சாதகமாக இருந்தாலும், பிற நாட்டு கரன்சிகளும் இதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து, பிரிட்டீஷ் பவுண்டுக்கு எதிராக ரூபாய் மதிப்பு 15.47% குறைந்து, ஒரு பவுண்டுக்கு ₹120 ஆகவும், யூரோவிற்கு எதிராக 8.32% குறைந்து ₹105 ஆகவும் உள்ளது. டாப் 5 இந்திய ஐடி நிறுவனங்கள், தங்கள் வருவாயில் 25% முதல் 33% வரை ஐரோப்பாவிலிருந்து பெறுகின்றன. டிசிஎஸ், அதன் வருவாயில் 17.5% ஐ இங்கிலாந்தில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிறது
2024-25இல், டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3.78% அதிகரித்து 3,018 கோடி டாலராகவும், இன்போசிஸ் நிறுவனம் 3.85% வளர்ச்சியுடன் 1,928 கோடி டாலராகவும், எச்சிஎல் டெக் (HCL Tech ) நிறுவனம் 4.3% வளர்ச்சியுடன் 1,384 கோடி டாலராகவும் இருந்தது. விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 2.72% குறைந்து 1,051 கோடி டாலராகவும், டெக் மஹிந்திராவின் வருவாய் 0.21% குறைந்து 626 கோடி டாலராகவும் குறைந்தது.
ரூபாயின் மதிப்பில் ஒவ்வொரு 1% சரிவும் லாப விரிவாக்கத்திற்கு 10-15 அடிப்படைப் புள்ளிகள் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
