ஐடிசி ஹோட்டல்ஸ்: Q3-ல இவ்வளவு லாபமா??
ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், வருவாய் அதிகரித்ததன் காரணமாக, ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.64 சதவீதம் உயர்ந்து ரூ. 236.83 கோடியாகப் பதிவாகியுள்ளதாக அறிவித்தது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 216 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
இந்த காலாண்டில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 1,015.40 கோடியிலிருந்து ரூ. 1,230.68 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தச் செலவுகள், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவான ரூ. 740.41 கோடியிலிருந்து, மூன்றாவது காலாண்டில் ரூ. 870.02 கோடியாக அதிகரித்துள்ளது.
அசாதாரணச் செலவினங்களின் கீழ், கடந்த ஆண்டு நவம்பரில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிய தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வந்ததன் காரணமாக, ரூ. 55.42 கோடி அளவுக்கு ஒருமுறைச் செலவு ஏற்படும் என இந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தால் விதிகள் இறுதி செய்யப்படுவது மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களின் பிற தொடர்புடைய அம்சங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப கணக்குகளில் உரிய முறையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ‘தித்வா’ புயலால் சேதமடைந்த சரக்குகள் காரணமாக ரூ. 28.58 கோடி நிகர இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக காப்பீட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
பிரீமியம் விருந்தோம்பல் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்காக சொத்து உரிமையாளர்களுடன் கூட்டு சேர்வதாக ஐடிசி ஹோட்டல்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் காலாண்டில், போத்கயா, ரிஷிகேஷ், சிலிகுரி, சிர்மௌர், துங்கர்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் புதிய ஹோட்டல்களைத் திறந்து நிறுவனம் அதன் இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டில், நிறுவனம் 2,790 அறைகளுடன் 28 ஹோட்டல்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது (இது முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் வளர்ச்சி). மேலும், மூன்றாவது காலாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அறைகளுடன் 150 செயல்பாட்டு ஹோட்டல்களைக் கொண்ட மைல் கல்லை எட்டியுள்ளது.
ஜிஎஸ்டி வரி விகித சீரமைப்பு மற்றும் பணவியல் தளர்வு உள்ளிட்ட சமீபத்திய கொள்கை நடவடிக்கைகள், குறுகிய காலத்தில் நுகர்வோரின் விருப்பச் செலவினங்களைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
