500 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள மணப்புரம் ஃபைனான்ஸ்
தங்கக் கடன் வழங்கும் நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ், 2027 நிதியாண்டில் அதன் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் (AUM) 25-30% வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் தங்கக் கடன்கள் முக்கிய வளர்ச்சி காரணியாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வி.பி. நந்தகுமார் தெரிவித்தார்.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து (NBFCs) நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், தற்போது 5,375 கிளைகளைக் கொண்ட இந்நிறுவனம், மார்ச் 2027-க்குள் கூடுதலாக சுமார் 500 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
”இதுவரை சுமார் 100 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 250 கிளைகளைத் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவை அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2027-க்குள் 500 கிளைகளைச் சேர்க்கும் இலக்கை நிறுவனம் நிச்சயம் எட்டும்” என்று நந்தகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
கிளை விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களின் உதவியுடன், இந்த ஆண்டு தங்கக் கடன் பிரிவில் 25-30% வளர்ச்சியை மணப்புரம் ஃபைனான்ஸ் எதிர்பார்க்கிறது. தங்கக் கடன் வணிகத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், தங்கத்தின் மதிப்பீடு, கடன்-மதிப்பு விகிதம் (LTV) மற்றும் தங்கத்தைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் ஆகியவற்றில் நிறுவனம் தொடர்ந்து அதே தரநிலைகளைப் பின்பற்றும் என்று நந்தகுமார் தெரிவித்தார்.
வாராக்கடன்கள் மற்றும் தங்க விலை ஏற்ற இறக்கங்கள் குறித்த கவலைகளுக்குப் பதிலளித்த நந்தகுமார், இந்நிறுவனத்தின் சராசரி கடன்-மதிப்பு விகிதம் (LTV) சுமார் 65% ஆக உள்ளது என்றும், இது இந்தத் துறையிலேயே மிகக் குறைந்த அளவுகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டார். தங்கக் கடன் போர்ட்ஃபோலியோவில், ‘நிலை 3’ (Stage 3) சொத்துக்கள் வெறும் 1% மட்டுமே உள்ளன.
தங்க விலை சரிவு உள்ளிட்ட பல்வேறு சூழல்களில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தங்கக் கடன்களைக் கையாண்ட அனுபவமும், போர்ட்ஃபோலியோவை நிர்வகித்த அனுபவமும் நிறுவனத்திற்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பருவகால மாற்றங்கள் காரணமாக, கடந்த காலங்களில் ஒவ்வொரு காலாண்டிலும் தங்கக் கடன் வளர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன என்று நந்தகுமார் கூறினார். நடப்பு நிதியாண்டில் தங்கக் கடன் சொத்து மேலாண்மை அளவில் (AUM) சுமார் 30% வளர்ச்சியை நிறுவனம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது என்றார்.
