மாருதி சுசுகியின் அடுத்த திட்டம்
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்காக நாடு முழுவதும் 100,000 சார்ஜிங் பாயிண்டுகளை அமைத்து, நுகர்வோர் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, இந்தத் துறையில் முதல் இடத்தை அடையும் என்று தெரிவித்துள்ளது.
2026 புத்தாண்டில் இந்நிறுவனம் அதன் முதல் மின்சார SUV வாகனமான இ-விட்டாராவின் விற்பனையைத் தொடங்க உள்ளது. “நாங்கள் மின்சார இயக்கத் துறையில் அடியெடுத்து வைக்கும்போது, தயாரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அடிப்படையில் முழு தயார் நிலையுடன் நுழைய இலக்கு வைத்துள்ளோம்” என மாருதி சுசுகி நிர்வாக இயக்குனர் ஹிசாஷி டகேயுச்சி கூறியுள்ளார்.
இதற்காக இரு முனை உத்தியை வகுத்துள்ளது. இ-விட்டாரா 543 கிமீ வரம்பைக் கொண்டிருக்கும். நாடு முழுவதும் 1,100 நகரங்களில் மாருதி சுசுகி அமைத்துள்ள 2,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்டுகள் இதற்கு உதவும். இதில் அதிக மின்சார வாகன ஊடுருவல் உள்ள முதல் 100 நகரங்களும், நகரங்களுக்கு இடையே வாடிக்கையாளர்கள் கவலையின்றி பயணிப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இறுதி செய்யப்பட்டுள்ள கூடுதல் இடங்களும் அடங்கும்.
“சார்ஜிங் கவலைகளை நிவர்த்தி செய்யும் மற்றும் நம்பிக்கையைத் தூண்டும் ஒரு முழுமையான, தீர்வை நாங்கள் தற்போது முன்னெடுத்து வருகிறோம்” என்று டேகுச்சி தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் பொது சார்ஜிங் உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்காக இந்நிறுவனம் 13 முன்னணி சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்கள் மற்றும் அக்ரிகேட்டர்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
‘e for me’ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சார்ஜிங் பாயிண்ட்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியும். டீலர் நெட்வொர்க் முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும், இந்த செயலியை உருவாக்குவதற்கும் மாருதி சுசுகி சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்துள்ளது.
1,500க்கும் மேற்பட்ட EV வாகன சேவை பட்டறைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ’சர்வீஸ் ஆன் வீல்ஸ்’ மூலம் தங்களின் வீட்டு வாசலில் சேவையைப் பெற முடியும். இதற்காக 500 EV சேவை மையங்கள் தயாராக உள்ளன.
