ஓலாவை மிஞ்சிய டிவிஎஸ்..!!
கடந்த நிதியாண்டில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை முந்தி, முதல் முறையாக இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளராக உருவெடுத்தது.
2025-ஆம் நிதியாண்டில் மின்சார இரு சக்கர வாகனங்களின் தொழில் துறை விற்பனை 11.4% அதிகரித்து 12,79,951 யூனிட்டுகளாக உயர்ந்த நிலையில், மின்சார கார்களின் விற்பனை சிறிய அடித்தளத்தில் இருந்து 77% அதிகரித்து 1,76,817 யூனிட்டுகளாக இருந்தது. JSW MG மோட்டார், மஹிந்திரா & மஹிந்திரா (M&M) மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் புதிய மாடல் அறிமுகங்களால் மின்சார கார் விற்பனைக்கு உத்வேகம் கிடைத்தது.
கடந்த ஆண்டு டிவிஎஸ் நிறுவனம் தனது மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் 35% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2,98,881 யூனிட்டுகளை விற்றது. இது ஓலாவின் 1,99,318 யூனிட்டுகளை விட மிக அதிகமாகும். இதனால் ஓலா நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அரசாங்கத்தின் ‘வாஹன்’ இணையதளத்தில் இருந்து ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் (FADA) திரட்டிய தரவுகளின் படி, ஓலாவின் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 4,00,707 யூனிட்டுகளிலிருந்து 51% சரிந்தது.
பஜாஜ் ஆட்டோ மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனங்கள் முறையே 2,69,847 யூனிட்டுகள் மற்றும் 2,00,797 யூனிட்டுகள் விற்பனையுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
கடந்த ஆண்டு இரு சக்கர வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கு 2024-ஆம் நிதியாண்டில் இருந்த 6.1%-லிருந்து 6.3% ஆக சற்றே அதிகரித்தது. பயணிகள் வாகனப் பிரிவில், இந்த பங்கு 2.4%-லிருந்து 4% ஆக விரிவடைந்தது
