நெவில் டாடாவுக்கு எதிர்ப்பு??
நவம்பர் 11 அன்று நடந்த டாடா டிரஸ்ட்ஸ் கூட்டத்தில், சர் ரத்தன் டாடா டிரஸ்டின் (SRTT) அறங்காவலரும் அதன் துணைத் தலைவருமான வேணு ஸ்ரீனிவாசன், நெவில் டாடா மற்றும் பாஸ்கர் பட் ஆகியோரை அறங்காவலராக நியமிக்க முன்மொழியும் தீர்மானம் கொண்டு வரப்பட்ட விதத்தை எதிர்த்ததாக அறியப்படுகிறது. இந்த விஷயம் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்படவில்லை. SRTT கூட்டத்திற்கு முந்தைய இரண்டு வாரியக் கூட்டத்தில் சர் டோராப்ஜி டாடா டிரஸ்டின் (SDTT) அறங்காவலராக நெவில் மற்றும் பட் நியமிக்கப்பட்டனர்.
டாடா டிரஸ்ட்களின் குழுமத்தில் SRTT மற்றும் SDTT இரண்டும் மிகப் பெரியவை. டாடா சன்ஸ் நிறுவனத்தில் இவை இரண்டும் கூட்டாக 51 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக பங்குகளை வைத்துள்ளன.
செவ்வாயன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டங்களில் கலந்து கொண்ட ஒருவரின் கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு விஷயத்தை நிகழ்ச்சி நிரலில் “வேறு ஏதேனும் விவாதப் பொருட்கள்” என்பதன் கீழ் கொண்டு வந்திருக்கக்கூடாது என்று வேணு ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டினார். ஒரு சரியான விவாதம் அவசியம் என்றும், அதற்காக தீர்மானம் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில், முதலில் SDTT விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து SRTT விவாதிக்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி மகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து, அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருந்ததால், கூட்டத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் கலந்து கொண்ட வேணு ஸ்ரீனிவாசன், SDTT கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த அவசரச் சட்டம் அறங்காவலர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைத்து, வாழ்நாள் அறங்காவலர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது.
SDTT கூட்டத்தில், வழக்கறிஞரும் அறங்காவலர்களுமான டேரியஸ் கம்பட்டா மற்றும் முன்னாள் சிட்டிபேங்கர் பிரமித் ஜாவேரி ஆகியோர் நெவில் டாடாவை அறங்காவலராக நியமிக்க முன்மொழிந்ததாகவும், நோயல் டாடா பாஸ்கர் பட் பெயரை முன்மொழிந்ததாகவும் அறியப்படுகிறது. சக அறங்காவலர் விஜய் சிங் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தார். அறக்கட்டளையை நடத்தி வந்த நிர்வாகக் குழுவைக் கலைக்கவும் கூட்டம் முடிவு செய்தது. இதனால் தலைவர் நோயல் டாடாவிடம் இறுதி அதிகாரங்களை ஒப்படைத்தது. இந்தக் குழுவில் முன்னதாக வேணு ஸ்ரீனிவாசன், விஜய் சிங், நோயல் டாடா மற்றும் மெஹ்லி மிஸ்திரி (அவரது பதவிக்காலம் முடியும் வரை) ஆகியோர் இருந்தனர்

Hi