சூப்பர் அறிவிப்பு.!குறைந்தது வட்டி..!!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இது நான்காவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது.
தற்போது, பணவீக்கம் குறைந்து, பொருளாதார நிலைமை கூடுதல் உறுதியாக இருப்பதால், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை கடன் வாங்குவதற்கான சாத்தியங்களை விரிவாக்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.
இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் EMI சுமை குறைக்கப்படும். வலுவான வளர்ச்சி மற்றும் பணவீக்கம் தணிவது ஆகியவை வட்டி விகிதக் குறைப்புக்கு இடமளித்துள்ளதாக RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளையும் உயர்த்தியுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பு 6.8% இலிருந்து 7.3% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டு FY26-க்கான வளர்ச்சி கணிப்பு 6.4%-இலிருந்து 7% ஆகவும், நான்காம் காலாண்டு FY26-க்கான கணிப்பு 6.2%-இலிருந்து 6.5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், முதல் காலாண்டு FY27-க்கான வளர்ச்சி கணிப்பு 6.4%-இலிருந்து 6.7%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2027 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8% என்ற விகிதத்தில் வளரும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.
உள்நாட்டு வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி அளவிலான திறந்த சந்தை பரிவர்த்தனைகள் (OMO) கொள்முதல் மூலம் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது
