அதிர்ச்சி தகவல் – பெரிய சரிவு!!
இந்தியாவின் ஸ்மால் கேப் (சிறிய நிறுவன) பங்கு விலைகள், ஒரு பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது. ஏஸ் ஈக்விட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு, 1,000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் உச்ச விலைகளில் இருந்து 20%க்கும் மேல் சரிந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. 440 நிறுவனங்கள் 50%-க்கும் மேல் சரிந்துள்ளன. பல நிறுவனங்கள் 90%க்கும் மேல் இழந்துள்ளன.
இந்த வீழ்ச்சியின் அளவு, சாதாரண ஏற்ற இறக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஆழமான திருத்தத்தை குறிக்கிறது. அதே நேரத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில், சென்செக்ஸ் 10% உயர்ந்துள்ளது. இது பெரிய கேப் பங்குகளில், முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்து வருவதாலும், நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பினாலும் சாத்தியமாகியுள்ளது . மிட்கேப் பங்குகள் 2% விலை உயர்வுடன் தொடர்கின்றன.
ஆனால் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு கடந்த ஓர் ஆண்டில் 6% (YTD) சரிந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான இழப்பு ஆகும். குறியீடுகள் குறிப்பிடுவதை விட கள நிலவரம் மிக மோசமாக உள்ளது.
தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், பொறியியல், ஜவுளி, பொருட்கள், நிதி, ஊடகம், ஐடி சேவைகள், மருந்து, பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவற்றின் உச்சங்களிலிருந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
இந்த வீழ்ச்சி அடிப்படையில் பலவீனமான நிறுவனங்களுக்கு மட்டும் ஏற்படவில்லை. உற்பத்தி, நுகர்வோர், ரசாயனங்கள், ஆட்டோமோபைல் பாகங்கள், தளவாடங்கள் மற்றும் சிறப்பு ரக மருந்துகள் ஆகியவற்றில், பிரபல நிறுவனங்களும் 40% முதல் 70% வரை சரிவைச் சந்தித்துள்ளன. இந்த பட்டியலில் ரேமண்ட், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், சொனாட்டா மென்பொருள், ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், இண்டிகோ பெயிண்ட்ஸ், ரூட் மொபைல், ஜிண்டால் பாலி பிலிம்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
ஸ்மால்கேப்ஸ் பரந்த அளவிலான இழப்பை தொடர்ந்து பதிவு செய்துள்ளன. ஏனெனில், இந்த பிரிவில் உள்ள நிறுவனங்களின் வருவாய், ஆண்டுக்கு ஆண்டு 3% வளர்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது, அவை 5% சரிந்துள்ளதாக மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்ட பகுப்பாய்வு கூறுகிறது. ஸ்மால்கேப் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 40% நிறுவனங்கள், முன் கணிப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன என்று கூறியுள்ளது.
