டாடா கேபிடல் காலாண்டு லாபம் 51% அதிகரிப்பு
டாடா கேபிடல் நிறுவனம், செப்டம்பர் காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 1,097 கோடியிலிருந்து 51% அதிகரித்து, ரூ. 1,660 கோடியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடன் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றம், அதிக வட்டி வருமானம் மற்றும் குறைந்த கடன் செலவுகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
டாடா குழுமத்தின் நிதிச் சேவை பிரிவான இந்நிறுவனம், தனது மொத்த நிகர வருமானம் முந்தைய ஆண்டின் ரூ. 3,774 கோடியிலிருந்து 24% அதிகரித்து, ரூ. 4,676 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. நிகர வட்டி வருமானம் (NII) 23% அதிகரித்து, ரூ. 3,006 கோடியிலிருந்து ரூ. 3,696 கோடியாக உயர்ந்துள்ளது.
முந்தைய காலாண்டுடன் (ஜூன் காலாண்டு) ஒப்பிடுகையில், நிகர லாபம் ரூ. 1,547 கோடியிலிருந்து 7% அதிகரித்துள்ளது; மொத்த நிகர வருமானம் ரூ. 4,455 கோடியிலிருந்து 5% வளர்ச்சி கண்டுள்ளது. நிகர வட்டி வருமானம் முந்தைய காலாண்டை விட 3.5% உயர்ந்துள்ளது.
இந்த வங்கி சாரா நிதி நிறுவனத்தின் மொத்த கடன் அளவு (Gross Loan Book) இந்த காலாண்டில் ரூ. 3 லட்சம் கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 27% அதிகரித்து, ரூ. 2,39,960 கோடியிலிருந்து ரூ. 3,03,739 கோடியாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30 நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு (AUM) 26% அதிகரித்து, ரூ. 2,43,896 கோடியிலிருந்து ரூ. 3,08,030 கோடியாக உயர்ந்துள்ளது. வாகனக் கடன் பிரிவைத் தவிர்த்துப் பார்த்தால், AUM முந்தைய ஆண்டை விட 32% வளர்ச்சி கண்டுள்ளது.
டாடா கேபிட்டலின் ஒதுக்கீட்டுக்கு முந்தைய செயல்பாட்டு லாபம், முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 33% அதிகரித்து, ரூ. 2,277 கோடியிலிருந்து ரூ. 3,025 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம் கடன் இழப்புகள் மற்றும் ஒதுக்கீடுகளுக்காக ரூ. 645 கோடியைப் பதிவு செய்துள்ளது; இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 773 கோடியை விட 17% குறைவாகும்.
