14 மாதங்களில் இல்லாத சரிவு
இறக்குமதி வரிகள் தொடர்பான கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் சில வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மத்தியில், நவம்பர் மாதத்தில் அமெரிக்க வேலை வாய்ப்புகள், கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தன. அதே நேரத்தில் ஆட்களைப் பணியமர்த்தும் வேகம் மந்தமாகவே தொடர்ந்தது.
அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தரவுகளில், எதிர்பார்த்ததை விட அதிக சரிவு இருந்த போதிலும், நிறுவனங்கள் பெருமளவில் ஆட்களைப் பணிநீக்கம் செய்யத் தயங்கின. இது தொழிலாளர் சந்தையை “ஆட்களைப் பணியமர்த்தவும் இல்லை, பணிநீக்கம் செய்யவும் இல்லை” என்ற நிலையில் வைத்திருந்தது. இது, இந்த மாத இறுதியில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் என்ற பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தியது.
தொழிலாளர் தேவையின் ஒரு அளவீடான வேலை வாய்ப்புகள், நவம்பர் மாத இறுதிக்குள் 303,000 குறைந்து 71.46 லட்சமாக ஆனது என்று தொழிலாளர் துறையின் தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம், அதன் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் இடமாற்றங்கள் கணக்கெடுப்பு (JOLTS) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 2024-க்குப் பிறகு காணப்பட்ட மிகக் குறைந்த அளவாகும். அக்டோபர் மாத வேலை வாய்ப்புகள் 74.49 லட்சமாக சரிந்தது.
நவம்பரில் ஆட்களைப் பணியமர்த்துவது 253,000 பணியிடங்களை குறைந்து, 51.15 லட்சமாக ஆனது. இது மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்த போதிலும், மந்தமான வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கு ஏற்ப இருந்தது.
ஆட்களைப் பணியமர்த்தியதில் ஏற்பட்ட சரிவு ஏறக்குறைய அனைத்து வணிக பிரிவுகளிலும் காணப்பட்டது. மேலும் இது மருத்துவத் துறை மற்றும் சமூக உதவித் துறையில் மிகவும் அதிகமாக இருந்தது. அங்கு பணியமர்த்தல் 76,000 குறைந்தது. ஒட்டுமொத்த பணியமர்த்தல் விகிதம் அக்டோபரில் 3.4% இலிருந்து 3.2% ஆகக் குறைந்தது.
இறக்குமதி வரிகள் தொடர்பான கொள்கை நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தயங்கின. இதன் விளைவாக வேலைவாய்ப்பற்ற பொருளாதார விரிவாக்கம் ஏற்பட்டது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிபர் டொனால்ட் டிரம்பின் பரந்த உலகளாவிய வரிகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
