அமெரிக்க இறக்குமதி வரிகளை எதிர்த்து வழக்கு தொடரும் சீனாவின் BYD
அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி வரிகளை விதிக்க, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்ததை எதிர்த்தும், கடந்த ஏப்ரல் முதல் செலுத்திய அனைத்து வரிகளையும் திரும்பப் பெறக் கோரியும் சீன வாகன உற்பத்தியாளர் BYD, அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
டிரம்ப் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) கொண்டு இறக்குமதி வரிகளை விதிக்க பயன்படுத்துவதை எதிர்த்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இதே போன்ற வழக்குகளை ஏற்கனவே தொடுத்துள்ளன.
ஜனவரி 26 அன்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், BYD இன் நான்கு அமெரிக்க துணை நிறுவனங்கள், IEEPA இன் விதிமுறைகளில் “இறக்குமதி வரி” என்ற வார்த்தையோ அல்லது அதற்கு சமமான அர்த்தமுள்ள எந்த வார்த்தையோ இல்லை என்பதால், இறக்குமதி வரிகளை சட்டம் அங்கீகரிக்கவில்லை என்று வாதிடுகின்றன. மற்றொரு முக்கிய வழக்கில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், இறக்குமதி வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே செலுத்திய இறக்குமதி வரிகளை திரும்பப் பெறும் திறனைப் பாதுகாக்க ஒரு சுயாதீனமான புகாரை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது என்று BYD இந்த வழக்கில் கூறியுள்ளது.
BYD நிறுவனம்அமெரிக்காவில் பயணிகள் கார்களை விற்பனை செய்யவில்லை என்றாலும், அங்கு பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள், பேட்டரிகள், எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.
கலிபோர்னியாவின் லான்காஸ்டரில் உள்ள அதன் கிளையான BYD வட அமெரிக்காவின் டிரக் ஆலையில் 750 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்று அதன் வலைத்தளம் கூறுகிறது. சீன கார்கள் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். ஆனால் அமெரிக்க மண்ணில் கார்களை உருவாக்க விரும்பும் ஒரு சீன ஆட்டோமொபைல் உற்பத்தியாளரை வரவேற்பதாக சில முறை கூறியுள்ளார்.
