ஸ்பேஸெக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் இணைப்பு பற்றி பேச்சுவார்த்தை
ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகின்றன. இது குறித்த ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள்ளேயே அறிவிக்கப்படலாம் என்று, இந்த விவகாரம் குறித்து அறிந்த நபர்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட இணைப்பு, எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் விண்வெளித் துறை சார்ந்த லட்சியங்களை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டு வரும். இருப்பினும், ஸ்பேஸெக்ஸுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் டெஸ்லா நிறுவனம் சீனாவுடன் கொண்டுள்ள வணிகத் தொடர்புகள் காரணமாக, இந்த இணைப்பிற்கு கடுமையான பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஸ்பேஸெக்ஸின் மூன்றாம் காலாண்டு வருவாய் குறித்த கலந்துரையாடலில், டெஸ்லா உடனான இணைப்பு “நல்ல யோசனையாக இருக்கும்” என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார். மேலும், இந்த இணைப்பு குறித்து விவாதிக்க இரு நிறுவனங்களும் சுதந்திரமான இயக்குநர்களைக் கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்துள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த அறிக்கை குறித்து கருத்து அறிய ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த வர்த்தக நிலவரப்படி, ஸ்பேஸெக்ஸ் சுமார் 1.90 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பையும், டெஸ்லா சுமார் 1.55 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பையும் கொண்டுள்ளன.
இந்த இணைப்பு குறித்த அறிவிப்பு 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குத் தள்ளிப்போகும் வாய்ப்பு குறித்தும் இரு நிறுவனங்களும் விவாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் டெராஃபேப் என்ற பெயரில் சிப் தயாரிக்கும் கூட்டு முயற்சி ஒன்றையும் கொண்டுள்ளன. இந்த கூட்டு முயற்சியின் மூலம், அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதவாக்கில் முதல் சோதனை சிப் தயாரிக்கப்படும் என்றும், 2028-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் பெருமளவிலான உற்பத்தியை எட்டுவதே இதன் இலக்கு என்றும் எலான் மஸ்க் அந்த உரையாடலின் போது தெரிவித்தார்.
