ITC-யின் அடுத்த Update..
பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாகோ (பிஏடி) நிறுவனம், ஐடிசி ஹோட்டல்களில் அதன் வசம் உள்ள பங்குகளில் 7 சதவீதம் முதல் 15.3 சதவீதம் வரை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்கு சந்தையில் பிஏடி தாக்கல் செய்த அறிக்கையில், அதன் முழு துணை நிறுவனங்களான டொபாகோ மேனுபேக்ச்சரர்ஸ் (இந்தியா), மைடில்டன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி மற்றும் ரோத்மன்ஸ் இன்டர்நேஷனல் எண்டர்பிரைசஸ் ஆகியவை ஐடிசி ஹோட்டல்களின் சாதாரண பங்கு மூலதனத்தில் 7 சதவீதம் முதல் 15.3 சதவீதம் வரை முதலீட்டாளர்களுக்கு விற்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இதன்படி பிஏடி 7 சதவீத பங்குகளை விற்க வாய்ப்புள்ளது. ஒப்பந்த விலை ஒரு பங்கிற்கு ₹205.65 ஆகவும், மொத்த விற்பனை அளவு ₹2,998 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் நேற்று பிஎஸ்இயில் ₹207.75 இல் முடிவடைந்தன.
பங்கு விற்பனை மூலம் ஈட்டப்படும் வருமானம், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் நிகர கடன் / வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கம் ஆகியவற்றிற்கு முன் வருவாய் விகிதத்தை 2–2.5x என்ற அளவில் நிலை நிறுத்த பயன்படுத்தப்படும்.
“இந்த பரிவர்த்தனையிலிருந்து கிடைக்கும் வருமானம், எங்கள் 2026 லீவரேஜ் காரிடோரை நோக்கிய முன்னேற்றத்தை மேலும் ஆதரிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று BAT தலைமை நிர்வாகி டேடூ மார்சோ கூறியுள்ளார். கடந்த பிப்ரவரியில் நடந்த ஆய்வாளர் கூட்டத்தில், ITC ஹோட்டல்களில் BAT தனது பங்குகளை சரியான நேரத்தில் விற்பனை செய்யும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டல் குழுமத்தில் நீண்டகால பங்குதாரராக இருப்பதில் BATக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.கடனை அடைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, BAT, மே 2025 இல், ITC இல் 2.5 சதவீத பங்குகளை விற்றது. இந்த விற்பனையின் மூலம் ₹12,941 கோடி நிகர வருமானம் கிடைத்தது.
ITC-யிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 2025 முதல் ITC ஹோட்டல்கள் பொதுவில் பட்டியலிடப்பட்ட தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, BAT, ITC ஹோட்டல்களில் 15.3 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ITC 39.85 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது
