22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

இந்தியாவுக்கு நல்ல சேதி வருமா?? டிரம்ப் பதில்

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் சரியான நேரத்தில் குறைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் போது டிரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

“நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி வருகிறோம். இது முன்பு இருந்ததை விட மிகவும் வித்தியாசமானது. அவர்கள் இப்போது என்னை நேசிக்கவில்லை, ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் என்னை விரும்புவார்கள். எங்களுக்கு ஒரு நியாயமான ஒப்பந்தம் கிடைக்க உள்ளது. அவர்கள் திறமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். எனவே செர்ஜியோ, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அனைவரும் ஏற்கும் படியான ஒப்பந்தம் ஒன்றை நாங்கள் நெருங்கி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

பின்னர், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பிடம் இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய காலக்கெடு மற்றும் கட்டணக் கொள்கை குறித்து கேட்கப்பட்டது.

”ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பிரச்சினை காரணமாக தற்போது இறக்குமதி வரிகள் அதிகமாக உள்ளன. ஆனால் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில், நாங்கள் இறக்குமதி வரிகளை குறைப்போம்” என்று அவர் கூறினார்.

நவம்பர் 5 அன்று, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-அமெரிக்க இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் முன்னேறி வருவதாகக் கூறினார். இருப்பினும் பல தீவிரமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறியும் வேலை தொடர்கிறது என்றார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும், கடைசியாக அக்டோபர் 23 அன்று வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் சந்தித்தனர். 2025 இலையுதிர் காலத்தில் முடிக்க இலக்கு வைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்காக, மார்ச் மாதத்திலிருந்து இது வரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *