ஆட்டிப்படைக்கும் பணிநீக்கம்..!
அமெரிக்காவைச் சேர்ந்த மிக பெரிய வயர்லெஸ் கேரியர் நிறுவனமான வெரிசான் 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைப்பதற்கும், நிறுவன செயல்பாடுகளை மறுசீரமைப்பதற்கும், இந்நிறுவனம் அதன் வரலாற்றில் முன்னெடுத்துள்ள மிகப்பெரிய வேலை குறைப்பு நடவடிக்கை இது தான்.
இந்த தகவல் அனைத்து ஊழியர்களுக்கும் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஷுல்மேன் அனுப்பிய மின்னஞ்ல் மூலம் அறிவிக்கப்பட்டது. 13,000 ஊழியர்களின் வேலை குறைப்புடன் பணிநீக்கங்கள் தொடங்கும் என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. “எங்கள் தற்போதைய செலவுகளின் அளவு, வாடிக்கையாளர் சேவைகளில் கணிசமாக முதலீடு செய்யும் திறனைக் கட்டுப்படுத்துகிறது,” என்று ஷுல்மேன் ஊழியர்களுக்கான மின்னஞ்சலில் கூறியுள்ளார்.
அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் இதர வகை வெளிப்புற தொழிலாளர் செலவுகளையும் வெரிசான் கணிசமாகக் குறைக்கும் என்று அவர் கூறினார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளின் தரத்தையும், அளவையும் அதிகரித்து, அவர்களை மகிழ்விக்க, நிறுவனத்தையும் நாங்கள் மறுசீரமைக்க வேண்டும்,” என்று அவர் எழுதியுள்ளார்.
வெரிசான் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த பணி நீக்க நடவடிக்கையினால், தொழிற்சங்கம் எதிலும் உறுப்பினராக இல்லாத பணியாளர்களில் 20% வரை நீக்கப்பட உள்ளனர். இதன் மூலம் வெரிசான் நிறுவனத்தை சீர் செய்ய ஷுல்மான் முன் வைத்துள்ள திட்டத்தின் முதல் கட்டம் நிறைவேற உள்ளது.
அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 179 சில்லறை விற்பனைக் கடைகளை, பிரான்ச்சைஸ் முறைக்கு மாற்றவும், ஒரு கடையை மூடவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதன் வசம் 1,300 கடைகளும், 6,000- க்கும் மேற்பட்ட பிரான்ச்சைஸ் ரக கடைகளும் இருக்கும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.
AI யுகத்தில் நுழையும் தருவாயில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் தேவையான திறன் மேம்பாடுகளை முன்னெடுக்க, வெரிசான் நிறுவனம் $2 கோடி அளவிலான தொழில் மாற்ற நிதியை நிறுவுவதாக டான் ஷுல்மேன் கூறினார்.
இந்த பணி நீக்கங்கள், வெரிசான் நிறுவனம் AI ஐப் பயன்படுத்தியதன் விளைவாக ஏற்பட இல்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது
