அமேசான் நிறுவனம்:10 நிமிடங்களில் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய உள்ளது
அமேசான் நிறுவனம், அதன் “அமேசான் நௌ (Amazon Now)” அதிவேக டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்து, 10 நிமிடங்களில் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய உள்ளது. இந்த விரிவாக்கம், பிளிங்கிட் (Blinkit) மற்றும் ஜெப்டோ (Zepto) போன்ற உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் அமைந்துள்ளது.
இந்தச் சேவைக்காக, பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட சிறிய டெலிவரி மையங்களை (micro-fulfilment centres) அமேசான் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நூற்றுக்கணக்கான மையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த மையங்கள் மளிகைப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும்.
இந்தச் சேவை குறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் சமீர் குமார், “பெங்களூருவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவை, எங்கள் எதிர்பார்ப்புகளை மீறி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தினசரி ஆர்டர்கள் மாதந்தோறும் 25% வளர்ந்துள்ளன.
பிரைம் வாடிக்கையாளர்கள் (Prime members) இதன் மூலம் ஷாப்பிங் செய்யும் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது” எனக் கூறினார். இந்த வெற்றி, சேவையை மேலும் விரிவாக்கம் செய்யத் தூண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அமேசான் நௌ சேவைக்கு, முக்கிய இடங்களிலுள்ள சிறிய டெலிவரி மையங்கள் கைகொடுக்கின்றன. இவை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்பப் பொருட்களை ஒழுங்கமைத்து, வேகமாகவும் பாதுகாப்பாகவும் டெலிவரி செய்கின்றன.
இந்த விரிவாக்கத்தின் மூலம் அமேசான், பிளிங்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமார்ட் (Instamart) போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நேரடிப் போட்டியாளராக மாறியுள்ளது. அமேசான் அதன் விரைவான விநியோகச் சேவையை அதன் முக்கிய அமேசான் செயலியிலேயே வழங்குகிறது.
இது பிளிங்கிட் மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற பிரத்யேக செயலிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் உத்திக்கு நேர்மாறானது. எனினும், இந்திய நகரங்களில் அதிவேக டெலிவரி என்பது மக்களின் பழக்கவழக்கமாக மாறி வருகிறது. இதனால், இச்சந்தையில் அமேசான் வெற்றிபெற கணிசமான முதலீடும் முயற்சியும் தேவைப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
