கிரிப்டோ கரன்சி மூலம் துபாயில் வாங்கிய வீடுகள்..
இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர்.
அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.நேரடியாக அவர்களின் எண்கள் மட்டுமின்றி குடும்பத்தாரின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறையினருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு கிரிப்டோ கரன்சிகள் மூலம் பணத்தை அனுப்பியது பல வகைகளில் விதிமீறலாக உள்ளது.தன்நபரின் கிரிப்டோ கரன்சி வாலட்டில் இருந்து துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் நிறுவன கணக்குக்கு கிரிப்டோ வகையில் பணம் அனுப்பியது முதல் விதிமீறல், FEMA முறைப்படி ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் பணம் அனுப்பியது இரண்டாவது விதிமீறல் என அடுக்கடுக்காக சிக்கல் அவர்களுக்குத் தொடர்கிறது.
துபாயில் வாங்கிய சொகுசு வீடுகளில் கிடைக்கும் வாடகையை மறைப்பதும் இந்திய சட்டங்களுக்கு எதிரானது மட்டுமின்றி வரி ஏய்ப்பாகவும் கருதப்படுகிறது.
துபாயில் கிரிப்டோவில் வீடுகள் வாங்க அனுமதி இருந்தாலும் சட்டவிரோதமான பணத்தில் வாங்க வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் துபாயில் மிகச்சிறிய தொகையை கிரிப்டோவில் செலுத்தினாலும் அது அரசாங்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படும்.
துபாயில் வீடுகள் வாங்கியோரின் பட்டியல் குறித்த தரவுகள் தானியங்கி முறையில் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் விரைவில் அவை அரசுக்கு தெரியப்படுத்தப்படும், அவ்வாறு தெரியவந்தால் வரிஏய்ப்பு செய்தவர்கள் வசமாக சிக்க வாய்ப்புள்ளது. இதற்கென பிரத்யேகமான பணிகளும் துவங்கியுள்ளன.
சட்ட விரோதமாக நடக்கும் பரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அண்மையில் நடந்த ஜி 20 நாடுகள் கூட்டத்தில் இந்திய அரசு சார்பில் நிதியமைச்சர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.