ஆகஸ்ட்டில் அட்டகாசமான விற்பனை:
பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சங்கம் கடந்த மாத விற்பனை குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டிலேயே 2 லட்சத்து 81 அயிரத்து 210 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து 4 வது மாதமாக உயர்ந்து வரும் அளவாகும். கடந்தாண்டு ஆகஸ்டில்,வெறும் 2 லட்சத்து 32 ஆயிரத்து 224 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 47 ஆயிரத்து 166 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளன. வாகன விற்பனை விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் சங்கத்துக்கு டாடா நிறுவனம் புள்ளி விவரங்கள் அளிக்கவில்லை. அதையும் சேர்த்தால் மொத்தம் 24 விழுக்காடு அதிகமாகி இருக்கும் என்கிறது புள்ளி விவரம். பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக 3 புள்ளி 29 லட்சம் வாகனங்கள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாருதி சுசூகி,மகிந்திரா,டாடா மோட்டார்ஸின் புதிய எஸ்யூவி வாகனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.பயணிகள் வாகனங்களைப் போல வணிக வாகனங்களின் விற்பனையும் ஆகஸ்டில் அமோக வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களின் விற்பனை 15 லட்சத்து 57 ஆயிரத்து 429 வாகனங்களாக உயர்ந்துள்ளது.வாகன தேவையும் 16 விழுக்காடு அதிகமாக உள்ளது. ஸ்கூட்டர் வகை வாகனங்கள் 5 லட்சத்து 4 ஆயிரத்து 146 விற்கப்பட்டுள்ளன. 3 சக்கர வாகனங்களின் விற்பனையும் 38 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது. பருவமழைகாலம் மற்றும் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வருவதால் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக கடந்தமாதம் மட்டும் ஆட்டோமொபைல் விற்பனை 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. மொத்தமாக 18 லட்சத்து 77 ஆயிரத்து 072 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.