சாப்பாடு விலை கொறஞ்சிடுச்சாம்..
குழம்பு,குழும்பு, ரசம்,ரசம்,மோர்.மோர் என்று நம்மூர்களில் சாப்பிடப்படும் மீல்ஸ்க்கு வடக்கே தாலி என்று பெயர் உண்டு,
இந்நிலையில் தாலி வகை உணவுகள் விலை கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஜனவரி மாதத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை குறைந்ததே இதற்கு காரணம் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
கிரிசில் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, வெங்காயத்தின் விலை கடந்த டிசம்பரை விட ஜனவரியில் 26 விழுக்காடும், தக்காளி விலை 16 விழுக்காடும் குறைந்திருக்கிறதாம். இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் வெங்காயம் மற்றும் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. தாலி வகை உணவுகள் கடந்த டிசம்பரில் சராசரியாக 29ரூபாய் 70 காசுகளாக இருந்த நிலையில் ஜனவரியில் இந்த விலை 28 ரூபாயாக குறைந்திருக்கிறது. கடந்தாண்டு ஜனவரியில் அரிசி மற்றும் பருப்பின் விலை கணிசமாக உயர்ந்திருந்ததாகவும்,வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை முறையே 35 மற்றும் 20 விழுக்காடு உயர்ந்திருந்ததாக கிரிசில் குறிப்பிட்டுள்ளது. அசைவ தாலி வகை உணவுகளின் விலையும் சராசரியாக பாதியாக குறைந்திருப்பதாக கிரிசில் தெரிவிக்கிறது. பிராய்லர் கோழிகளின் விலை கணிசமாக குறைந்திருப்பதாகவும் டிசம்பரில் ஒரு அசைவ தாலி வகை உணவு 56ரூபாய் 40 பைசாவாக சராசரியாக இருந்த நிலையில் கடந்தஜனவரியில் அது 52 ரூபாயாக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் என்பது குறைந்திருப்பதன் வெளிப்பாடாகவே தாலி வகை உணவுகள் விலை குறைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. பார்கிளேஸ் நிறுவனத்தின் கணிப்புப்படி, ஜனவரியில் பணவீக்கம் என்பது 5.4 விழுக்காடாக இருக்கிறது. இதே பணவீக்கம் கடந்த டிசம்பரில் 5.7 விழுக்காடாக இருந்தது. கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி வரும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும் நிதி கொள்கை கூட்டங்களில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.