உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்,தங்கம்..
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 6ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 408 புள்ளிகள் உயர்ந்து 74,085 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 22,474 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Bajaj Auto, Kotak Mahindra Bank, Axis Bank, Bharti Airtel, SBI Life Insuranceஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Adani Enterprises, UltraTech Cement, NTPC, ONGC,BPCLஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. வங்கித்துறை பங்குகள் 1விழுக்காடு வரை உயர்வில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.7விழுக்காடு வரை உயர்ந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு , ஆற்றல்துறை பங்குகள் சரிவை சந்தித்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத உச்சத்தில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6040 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 48ஆயிரத்து 320 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, 20 காசுகள் சரிந்து 78 ரூபாய் ஆக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 78 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்