இந்தியாவிடம் எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றியம்..

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் வரி விதிப்பு முறை பற்றி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதே பாணியில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஆசையை இந்திய அரசிடம் முன்வைத்துள்ளது. அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இந்திய கார்கள் இறக்குமதிக்கும், இந்தியாவில் ஐரோப்பிய கார்கள் இறக்குமதிக்கும் இறக்குமதி வரியே இருக்கக் கூடாது என்பதே அந்த ஆசை. தற்போது வரை இந்தியாவிற்குள் வெளிநாட்டு கார்கள் இறக்குமதிசெய்தால் அதற்கு 100 விழுக்காடு அல்லது அதற்கும் மேலாக வரி விதிக்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். இதே பாணியில் தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் கோரிக்கை விடுத்துள்ளது.
அப்படி வரி விதிப்பு ரத்தாகும்பட்சத்தில், ஐரோப்பிய கார்களான ஃபோக்ஸ்வாகன், மெர்சீடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ விற்பனை இந்தியாவில் அதிகரித்துவிடும். பெர்லினில் உள்ள டெஸ்லா ஆலையும், உற்பத்தியை தொடரும்பட்சத்தில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும். ஐரோப்பிய ஒன்றியம் வைத்துள்ள கோரிக்கைக்கு இந்திய அரசு செவிசாய்க்கும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய அரசின் அதிகாரிகள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். 40லட்சம் கார்கள் வரை விற்கும் திறமையுள்ள இந்திய சந்தையில் , இறக்குமதி வரியை ரத்து செய்தால் அது உள்ளூர் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. டாடாமோட்டார்ஸ், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் கார்களை தயாரித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சலுகை வழங்கினால் மின்சார கார்கள் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.