பெட்ரோல், டீசல் விலை உயருமா?
ஓபெக் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எடுக்கும் முடிவின்படிதான் உலகம் முழுக்கவும் எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குழுவினரின் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் என்ற அளவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நிலையில் தொடங்கியிருக்கும் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க முடிவெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஓபெக் நாடுகளின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வர்த்தக ரீதியிலும் பெரிய தாக்கத்தை இந்த முடிவு ஏற்படுத்தும் என்பது பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஓபெக் அமைப்பின் இந்த திடீர் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க அரசு தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதால் இந்தியா போன்ற பெட்ரோலிய இறக்குமதி நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் நிலவும் மந்தநிலையே உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் சூழலில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..