எங்களுக்கு இது பத்தாது, நாங்க குஜ்ராத்துக்கு போறோம்!!!!
அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் செமி கண்டெக்டர் எனப்படும் அரைக்கடத்திகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைகளை தொடங்க பல்வேறு நிறுவனங்களும் இசைவு தெரிவித்திருந்தன. மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆலைகள் அமைக்க திட்டமிடப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துபாய் மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் செமி கண்டெக்டர்களை தயாரிக்க கர்நாடக அரசுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன.
இதே போல் தமிழகத்திலும் சிங்கப்பூரைச் சேர்ந்த IGSSநிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிலையில் செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு முன்வந்தது. இதனால் ஆர்வமடைந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேதாந்தா நிறுவனமும், தைவானை அடிப்படையாக கொண்ட பாக்ஸ்கான் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இரு நிறுவனங்களும் இணைந்து குஜராத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செமி கண்டெக்டர் ஆலையை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதலில் புனேவில் ஆலை அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் , மகாராஷ்டிர அரசு அளித்த சலுகைகள் திருப்திகரமாக இல்லை என்பதால் குஜராத்துக்கு ஆலை மாற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.