வடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் ஏன் சிறந்தவை…
உலகப்புகழ் பெற்ற பிபிசி நிறுவனம் இந்தியாவின் வடமாநிலங்களைவிட தென்மாநிலங்கள் ஏன் சிறந்தவை என புள்ளிவிவரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் தென் மாநிலங்களில் தமிழகம்,ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு என முதலில் பட்டியலிடுகிறது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு தென் மாநிலங்களில் மிகவும் குறைவு என்றும் வடமாநிலங்களில் குழந்தைகள் இறப்பு அதிகம் என்ற போதிலும் மக்கள் தொகை உயர்வு மிக அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிட்டத்தட்ட கிடைத்து விடுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி,சுகாதாரம்,ஊட்டச்சத்து, மருத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் தென்மாநிலங்களில் மிகச்சிறப்பாக உள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
இந்த வகையான அடிப்படை அம்சங்கள் ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளைவிட அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. தென்மாநிலங்களிலேயே கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு மிக முக்கிய இடம் உள்ளதாகவும் பிபிசி கூறுகிறது.மதிய உணவுத்திட்டம்சுதந்திரத்துக்கு பிறகு தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்றும் புகழப்பட்டுள்ளது.
அதிக நலன்கள் உள்ள தென் மாநிலங்கள் சந்திக்கும் பிரச்னைகள்:
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென்மாநிலங்கள் மிக மோசமான நிலையிலியே இருந்தன. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென பிரத்யேக கோரிக்கைகள், பிரத்யேக அரசியல் முடிவுகளை தாங்களாகவே கட்டமைத்து சிறப்பாக வளர்ந்துள்ளதாகவும் பிபிசி கட்டுரையில் புகழப்பட்டுள்ளது.
மிகச்சிறப்பான கல்வி அறிவுள்ள தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கமில்லாமல் உள்ளதே பாதகமாகவும் மாறிவிடுகிறது. அதாவது மிக அதிகமாக நம் கைகளில் இருந்து வசூலிக்கப்படும் வரிகள், மக்கள் தொகை அடிப்படையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதாகவும், மிக குறைவான அளவே நம் மாநிலத்துக்கு அளிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே வரிகள் பிரித்து மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும், வரும் காலங்களில் அரசியல் களத்தில் தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவமும் குறையும் என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.