இதோ வந்திருச்சு 5 ஜி..
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில் இந்திய மொபைல் காங்கிரஸ் எனும் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது
இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், வோடபோன் நிறுவனத்தின் ரவீந்திர டக்கர் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது . அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி அலைக்கற்றை சேவை கொண்டுவரப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கண்ணாடிஇழை கம்பிகள் மூலம் நாட்டின் தொலைதூர கிராமங்களுக்கும் இணைய சேவை கிடைக்க உள்ளதாக சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் 5ஜி சேவை துவங்கப்பட உள்ளது
இந்த 5ஜி சேவை 4ஜியை விட 10 மடங்கு அதிகவேகம் கொண்டதாக இருக்கும். குறைந்தபட்ச இணையவேகம் நொடிக்கு100 மெகாபைட்ஸ் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த 5ஜி சேவை தொலைதொடர்புக்கு மட்டுமின்றி இயந்திரங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது