கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன.
மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப நிலையில் உள்ள பிற நிறுவன ஊழியர்களை எடுக்கவே நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும்,சொமாட்டோ,இண்டஸ் இன்சைட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்தாண்டைவிடவும் அதிகளவில் ஆட்களை பணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேபோல் கல்லூரிகளும் துவக்க நிலை நிறுவனங்களை விரும்பாமல் நன்கு வளர்ந்த நிறுவனங்களையே அதிகம் நாடுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பேடிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் புதிதாக ஆட்களை எடுப்பதற்கு பதிலாக தங்கள் பழைய ஊழியர்களின் திறன்மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் கடந்தாண்டு இருந்த உத்வேகம் வரும் 2023ம் ஆண்டில் இருக்காது என்றும், கொரோனாவால் ஏற்கனவே மாணவர்களின் படிப்பின் தரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர்களின் பணி சூழல் மற்றும் வேலைவாய்ப்புகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதும் துறை சார்ந்த நிபுணர்களின் ஆதங்கமாக உள்ளது