3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்…..
இந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தையால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியான நிலையில் அங்கு மேலும் கடன்களின் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் தாக்கம் பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோரின் அளவு 3.5% ஆக உயர்ந்துள்ளதால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தங்கள் நாட்டு சூழலை கட்டுப்படுத்த கூடுதல் கடன் சுமையை மக்கள் மீது திணிக்கும் என்ற அச்சம் உள்ளது.இதுகுறித்த அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாக அதிகவாய்ப்புள்ளது.
இதேபோல் தொடர்ந்து சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை கடந்த வெள்ளிக்கிழமை விற்றதன்காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவையே பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.90 டாலர் என்ற அளவில் இருந்த கச்சா எண்ணெயின் விலை அண்மையில் ஓபெக் அமைப்பினர் வெளியிட்ட உற்பத்தி கட்டுப்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட 100 டாலர் விலை வரை உயர்ந்துள்ளது.
ஆசிய மற்றும் ஜப்பானிய பங்குச்சந்தைகளில் நிலவும் மந்த நிலையும் இந்திய பங்குச்சந்தையில் பிரதிபலிக்கிறது என்பது நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.