இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த சர்வதேச நிதியம்…..
இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. உலக பொருளாதார ஆய்வறிக்கையை ஐஎம்எஃப் அண்மையில் வெளியிட்டது. இதில் இந்தியாவின் வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட 60 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று புதிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியும் அண்மையில் இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி 20 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று மறுமதிப்பீடு செய்துள்ளது. இந்த நிலையில் 2023 மற்றும் 24-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவிலான வளர்ச்சி சராசரியாக 3.2%ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சி 2.3%இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 70 அடிப்படை புள்ளிகள் சரிந்து 1.7%ஆக மட்டுமே உள்ளது.
போரை முன்னெடுத்து வரும் ரஷ்யாவின் வளர்ச்சி நடப்பாண்டில் 3.4%ஆக இருக்கும் என்றும் அடுத்தாண்டு 2.3%ஆக சரியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.சீனாவின் வளர்ச்சி 10 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளதாகவும், அடுத்தாண்டு 20 புள்ளிகள் குறைந்து உள்நாட்டு வளர்ச்சி 4.4%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அசுர வளர்ச்சி கண்டிருந்தாலும்,இரண்டாவது காலாண்டில் உலகளாவிய மந்தநிலை நீடிக்கிறது என்பதால் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.