எப்ப வேணாலும், என்ன வேணாலும் நடக்கலாம்:ரிசர்வ் வங்கி
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஏறி வந்த பணவீக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கடினமான சூழலை சமாளிக்கும் அளவுக்கு இந்திய பொருளாதாரம் தாக்குப்பிடிக்க உள்ளது. எனினும் சர்வதேச அளவிலான காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கிராமபுறங்களில் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாலும், நகரப்பகுதிகளில் பொருளாதாரம் சீராக உள்ளதாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, உள்ளூர் மற்றும் உலகளாவிய காரணிகள் இந்திய பொருளாதாரத்தை எந்த நேரத்திலும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிலை கடினமாக மாறி வருவதாலும், சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாலும் ஒரு வித நிலையற்ற சூழல் காணப்படுகிறது. சர்வதேச சந்தை சூழல்கள் மாறி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது ரெபோ விகிதம் கொரோனாவுக்கு பிறகு 190 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு, பணவீக்கத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரெபோ விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றி வரும் நிலையில் அதற்கு உண்டான பலன்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. எனினும் உடனடியாக விலைவாசி ஏன் கட்டுப்படவில்லை என ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு விளக்கக் கடிதம் அளித்துள்ளது.அந்த கடிதத்தில், முக்கிய காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பெருந்தொற்று காரணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும்,உலகளவில் நிலவும் உணவு ஏற்ற இறக்கமும்தான் இந்தியாவில் விலைவாசி உயர்வு பணவீக்கத்துக்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. உலகளவில் உள்ள பொருளாதார மந்த நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய ரிசர்வ் வங்கி பல நாடுகளில் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.