பாதிப்பில் இருந்து மீண்டுவிட்ட திருமண சந்தை!!!
திருமணங்கள் ஆயிரம் காலத்து பயிர்கள் என்று சொல்வதாலும், சிலருக்கு அது வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு
என்பதாலும் திருமணத்துக்கும் இந்தியர்களுக்கும் அப்படி ஒரு பந்தம் உள்ளது அதனால் தானோ என்னவோ இந்தியாவில் திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆடம்பர மயமாகிவிட்டது இந்தியாவில் திருமண சந்தை வணிகம் எவ்வளவு என்று கேட்டால் தலைசுற்றிப்போவீர்கள். இந்தியாவில் திருமணத்துக்காக செய்யப்படும் பொருட்கள், அதன் இணைப்பு செலவுகள் என 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திருமணத்துக்காக செலவாகின்றன. இந்தாண்டு துவக்கம் சற்று முன்னும் பின்னும் இருந்தாலும் நடப்பு நவம்பரில் இருந்து வரும் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 32 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் கடந்தாண்டு வெறும் 25 லட்சம் திருமணங்கள் மட்டுமே நடைபெற்றன.
நடப்பாண்டு திருமணத்தை மையப்படுத்தி மட்டுமே மூன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது இதுபற்றி தனியார் திருமண ஏற்பாட்டாளரின் நிறுவனம் முக்கிய தகவலை சிஎன்பிசி டிவி18க்கு தெரிவித்துள்ளது. அதில் கொரோனாவுக்கு முன்பு இருந்ததைவிடவும் பிரமாண்ட வரவேற்பு இந்த துறைக்கு கிடைத்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் கொரோனாவுக்கு பிறகு பிரமாண்டமாக திருமணங்கள் நடந்தாலும் கொரோனாவுக்கு முன்பு இருந்த கூட்டம் இப்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பூக்களின் விலை 2019ம் ஆண்டு இருந்ததைவிடவும் 100விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், ஒரு திருமணத்துக்கு சராசரியாக 10 முதல் 15 லட்சம் ரூபாய் செலவாகிறது என்றும் அந்த நிறுவனம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.