ஜியோவுக்கு வலுக்கும் சிக்கல்..
டிஜிட்டல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரிலையன்சுக்கு வரும் வருமானம் வெகுவாக குறைந்து வருகிறதாம். 2023ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டின் செயல்பாடுகளின் கூட்டத்தில் இது குறித்த புள்ளிவிவரம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோ பாரத் ஃபோன்கள் அதிகம் பேர் வாங்கி வருவதாலும், மலிவான 5ஜி சேவை பேக்குகளாலும், ஜியோவுக்கு ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வரும் பணம் குறைந்திருக்கிறதாம். ஏற்கனவே கடனால் தவிக்கும் வோடஃபோன் நிறுவனம், 5ஜி சேவையை அளிக்க முடியாமல் தவித்து வருகிறது. மக்களில் பலரும் 5ஜி செல்போன் திட்டங்களையே வாங்கி வருவதால் 4ஜி ரீசார்ஜ் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஜியோ 181 ரூபாய் கடந்த டிசம்பர் காலாண்டில் வசூலிக்கிறதாம். டிசம்பருடன் முடிந்த காலாண்டில் புதிதாக 1 கோடியே 12 லட்சம் பேர் ஜியோவில் இணைந்திருக்கின்றனர். குறிப்பாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஜியோ பாரத் ஃபோன்களின் காரணமாகவே இத்தனை பேர் ஜியோவில் சேர்ந்திருக்கின்றனர். இதேபோல் ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஒயரில் இயங்கும் சேவைகளுக்கும் தேவை அதிகரித்துள்ளது. 3 மற்றும் 4ஆம் தர நகரங்களிலும் ஜியோவின் வளர்ச்சி கணிசமாக இருக்கிறதாம். டிசம்பர் வரை முடிந்த காலாண்டில் ஜியோவின் தனிவருமானம் மட்டும் 12.3% வளர்ந்திருக்கிறது. அதாவது ஜியோவின் வருமானம் மட்டும் காலாண்டில் 25,368 கோடி ரூபாயாக இருக்கிறது. இருந்தாலும் நஷ்டத்தை சரி செய்ய ஜியோ நிறுவனம் கண்டிப்பாக கூடுதல் கட்டணம் விரைவில் வசூலிக்கும் என்றும் பல நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. ஜியோ நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி மதிப்பு 75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.