“ஆபிசுக்கு வாங்க..,இதான் கடைசி வார்னிங்..”
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக உள்ள டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வர கடைசி வாய்ப்பு அளித்திருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் உலகமே முடங்கிக்கிடந்த நேரத்தில் டிசிஎஸ் உள்ளிட்ட அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்தன. வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பும் அதில் ஒன்று. இந்நிலையில் படிப்படியாக நிலைமை சீரடைந்து கொரோனா முற்றாக ஒழிந்துவிட்ட நிலையில் மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு படிப்படியாக அழைத்து வருகின்றனர். இந்த சூழலில் டிசிஎஸ் பணியாளர்கள், கண்டிப்பாக அலுவலகம் வர ஏற்கனவே சுற்றறிக்கை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேறு சில காரணங்களுக்காக அலுவலகம் வர முடியாதவர்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் ஏற்பாடுகளை செய்து கொள்ள அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மார்ச் மாதத்துக்கு பிறகும் அலுவலகம் வரவில்லை எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்தலைவர் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு மற்றும் பணி சூழல் காரணமாகவே அலுவலகத்துக்கு வரச் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சைபர் தாக்குதல் அதிகரிப்பை குறைப்பதும் முக்கிய காரணமாம். வீட்டில் இருந்தே பணியாற்றுவதால் பணி கலாச்சாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சுப்பிரமணியனின் கருத்தை அந்நிறுவன தலைமை மனிதவளப்பிரிவு தலைவரான மிலிந்த் லக்காடும் வழிமொழிந்திருக்கிறார். வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் இரண்டாவதாக ஒரு வேலையை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்த நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் 5 நாட்களும் அனைத்து பணியாளர்களும் அலுவலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டது.