2,000 ரூபாய் திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட பாதிப்பு..
கடந்த 9 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் அளவு 3.7விழுக்காடாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணப்புழக்கத்தின் அளவு என்பது 8.2 விழுக்காடாக இருந்தது. அண்மையில் ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் படிப்படியாக சந்தையில் இருந்து திரும்பப்பெறப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தி்ல் இல்லாதததால் மக்களிடம் பணப்புழக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் டெபாசிட்களின் அளவு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. அதற்கும் 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ரிசர்வ் மனி என்ற கையிருப்பு பணம் 5.8 விழுக்காடாக பிப்ரவரி 9 ஆம் தேதி இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு கையிருப்பு பணம் 11.2 விழுக்காடாக இருந்தது. கடந்தாண்டு மே மாதம் 19 ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரசிர்வ் வங்கி அறிவித்தது. ஜனவரி 31ஆம் தேதி வரை 97.5 விழுக்காடு அளவுக்கு 2,000ரூபாய் நோட்டுகள் வங்கி கட்டமைப்புக்கு திரும்பியுள்ளன. 8,897 கோடி ரூபாய் அளவுக்கு 2,000ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்கள் கைகளில் இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் அறிவிப்புக்கு முன்னதாக 3.56 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வகை நோட்டுகள் மக்கள் கைகளில் புழங்கின. நோட்டுகளை டெபாசிட் செய்யவும் மாற்றிக்கொள்ளவும் கடந்தாண்டு செப்டம்பர் 30 வரையும், பின்னர் அந்த அவகாசம் அக்டோபர் 7 வரையும் நீட்டிக்கப்பட்டது.
குறிப்பிட்ட இந்த தேதிக்கு பிறகும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டது. பிரத்யேகமாக 19 மையங்களில் 2,000ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கும் திட்டமும் அமலில் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 2,000ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது பழைய 500,1000ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் அறிமுகமான 2,000ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் 7 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.