ஹியூண்டாயை மிஞ்சுமா டாடா மோட்டார்ஸ்..
இந்திய அளவில் ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் முகவர்கள் சங்கத்தின் அதிகாரபூர்வ தகவல் ஒன்று டாடா நிறுவனத்துக்கு சாதகமாக வெளியாகியிருக்கிறது. மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில் ஹியூண்டாய் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனையை டாடா மோட்டார்ஸ் எட்டிப்பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் டாடாட மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு 13.57 விழுக்காடாக இருக்கிறது. அதே நேரம் ஹியூண்டாயின் பங்கு 14 விழுக்காடாக இருக்கிறது. மாருதி சுசுக்கியின் பங்களிப்பு 39.74 விழுக்காடாக உள்ளது. ராணிப்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை டாடா மோட்டார்ஸ் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹியூண்டாய் அறிவித்துள்ளது. டாடாவின் புதிய ஆலையில் வணிக பயன்பாட்டு வாகனங்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் பிம்பிரி பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவன ஆலையில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்கள் தயாராகின்றன. நெக்சான் மற்றும் மற்ற இன்ஜின் சார்ந்த பொருட்கள் மகாராஷ்டிர மாநிலம் ரன்ஜன்கோன் பகுதியில் தயாராகி வருகிறது. குஜராத்தின் சனந்த் பகுதியில் வழக்கமான பெட்ரோல் இன்ஜின் வண்டிகள் மற்றும் மின்சார கார்கள் தயாராகி வருகின்றன. சனந்த் பகுதியில் ஃபோர்ட் நிறுவனத்திடம் இருந்து அண்மையில் வாங்கப்பட்ட கார் ஆலையில் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் டாடா உற்பத்தி செய்ய முடியும். தமிழ்நாட்டை டாடா விரும்ப காரணம் என்ன?
குறைவான கட்டணம், விநியோகத்தில் ரிஸ்க் குறைவு மற்றும் அருகிலேயே துறைமுகங்கள் இருப்பதும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. துறைமுகங்கள் அருகில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை இருப்பதால் மின்சார கட்டணத்தில் சலுகை, ஜிஎஸ்டியில் சலுகைகள் கிடைக்கின்றன. மாநிலத்துக்கு மட்டுமின்றி இந்திய அளவில் வாகன உற்பத்திக்கு டாடா மோட்டார்ஸின் வருகை மிகவும் உதவியாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. இது மட்டுமின்றி மின்சார வாகன கொள்கைகளும் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளதும் டாடா மோட்டார்ஸை ஈர்க்கும் அம்சமாக கருதப்படுகிறது.