கடுமையாக விமர்சிக்கப்படும் காக்னிசண்ட்..
டெக் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் காக்னிசண்ட் நிறுவனம் இந்தியாவில் கவனிக்கத்தக்க ஒரு கம்பெனி. இந்த நிறுவனம் அண்மையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தது. அதில் தொடக்க சம்பளமாக ஆண்டுக்கு 2.5லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது 20 ஆயிரம் ரூபாய்க்கு சற்றே அதிகமாகும். இந்த சம்பளம் கடந்த 2002-ல் அறிமுக சம்பளமாக இருந்தது. இது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் வேலை இல்லை என்ற சூழலில், புதிதாக வேலைக்கு ஒருவரை எடுத்து அவருக்கு 22 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பளத்தை எப்படி வழங்க முடியும் என்று இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சம்பளத்தையும், விலைவாசியையும் வைத்து கணக்கிட்டால், பெரிய மெட்ரோ நகரங்களில் ஒருவர் எப்படி வாழ முடியும் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வீட்டு வேலை செய்பவர்களும், டியூஷன் எடுப்பவர்களும் இன்ஜினியரை விட அதிகம் சம்பாதிப்பதாக பலரும் மீம்ஸ்களை அள்ளி விட்டுள்ளனர். தலைமை பண்பில் இருப்பவர்களுக்கு மட்டும் கோடிகளில் சம்பளம் தருவதையும் நெட்டிசன்கள் விமர்சிக்கத் தயங்கவில்லை. அக்சென்சர், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் இதே பிரச்சனை இருக்கிறது. அமெரிக்காவில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இருந்தால் தொழிலாளர் சங்கங்கள் களத்தில் குதித்து பேரம் பேசும் நிலையில் இந்தியாவில் அது சாத்தியம் இல்லாமல் போய் உள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.