துரித வர்த்தகம் கடும் போட்டி..
ஆர்டர் பண்ணுங்க அரை மணிநேரத்தில் பொருட்கள் வந்துவிடும் என்று விளம்பரப்படுத்தி அதை செய்தும் காட்டுவதுதான் துரித வர்த்தகம்..ஆங்கிலத்தில் இதற்கு குயிக் காமர்ஸ் என்று பெயர். இந்த வணிகத்தில் ஏற்கனவே பல ஜாம்பவான்களான ஜெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் கோலோச்சி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் தற்போது ஓலாவும் இணைந்துள்ளது. செப்டோ, ஜொமேட்டோவின் பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வணிகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் உள்ளனர். 5பில்லியன் அமெரிக்கடாலர்கள் அளவுக்கு சந்தை மதிப்பு இந்த வகை சந்தைகளில் உள்ளன. வித்தியாசமான முயற்சிகளை நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த துரித வர்த்தகத்தில் பிற நிறுவனங்கள் மனித ஆட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஓலா நிறுவனம் ரோபோக்களை தனது பணிகளில் பயன்படுத்த உள்ளது.முதல்கட்டமாக வேர்ஹவுஸ் எனப்படும் கிடங்கில் முழுவதுமாக ரோபோக்களே பயன்படுத்தப்பட உள்ளன. ரோபோக்கள் சோர்ந்துவிடாது என்று கூறியுள்ள ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வால் 2ஆயிரத்து 500 முதல் 3,500 சதுரஅடியில் இந்த ரோபோ கிடங்கு குடியிருப்புப் பகுதியில் வைக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஒரு ஆர்டரை பிரித்துக் கொடுக்க சராசரியாக 4 நிமிடங்கள் மட்டும் போதும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் ஓலா நிறுவனத்தின் டார்க் ஸ்டோர்களில் 6ஆயிரத்து 250 யூனிட்களை வைக்க முடியும் என்றும் , டார்க் ஸ்டோர்கள் மூலம் பணிகளை விரைவாக செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே உணவு டெலிவரி சோதனையில் பல முயற்சிகளில் தோல்வியடைந்த ஓலா நிறுவனம் தற்போது பொருட்களை விநியோகிக்கும் துறையில் அடியெடுத்து வைக்கிறது.