தேசிய பங்குச்சந்தையின் புதிய உத்தரவால் பாதிப்பு?
ஜிரோதா என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளவர் நிதின் காமத், இவர் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அறிமுக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார். அவர் ஏன் இதை சொல்ல வேண்டும் என்று பார்த்தால்தான் விஷயம் புரிந்தது. தேசிய பங்குச்சந்தை கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பொருளை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தினால் போனஸ் அளிக்கக் கூடாது என்றும், பங்குச்சந்தையில் பதிவு செய்த நபர் இதை செய்யலாம் எனவும், பதிவு செய்யப்படாதவர்கள் இதை செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தங்கள் வணிகத்தை பாதிக்கும் அறிவிப்பு என்று கூறியுள்ள நிதின், ஜீரோதா நிறுவனம் ரெபரல் போனஸை அளிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென தேசிய பங்குச்சந்தை முடிவுக்கு வர காரணம் என்ன என விசாரித்தபோது, இந்திய பங்குச்சந்தைகளில் மோசடிகளை தடுக்க உதவும் என்றும் தேசிய பங்குச்சந்தை கூறியுள்ளது. முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காகவே பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே ரெபரல் செய்ய அனுமதிப்பதாகவும். விதிகளுக்கு உட்பட்டு தான் ஒரு வணிகம் நடக்கிறது என்ற ஒரு உத்தரவாதம் அளிக்கவே இந்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறைப்படுத்தப்படாத திட்டங்களை தடுப்பதால் தேசிய பங்குச்சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் சட்டப்போராட்டங்களை மேற்கொள்ளவும் உதவும் என்றும் தேசிய பங்குச்சந்தை விளக்கியுள்ளது.