ஐஸ்கிரீமால் உச்சம் தொட்ட பிரபல நிறுவனம்..
இந்தியாவில் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமாக திகழ்கிறது இந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டட். இந்த நிறுவனம் தங்கட்கிழமை புதிய உச்சம் தொட்டது. இதற்கு முக்கிய காரணமாக ஐஸ்கிரீம் பிசினஸ் திகழ்கிறது. கடந்த மார்ச் மாதமே ஐஸ்கிரீம் வணிகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான யுனிலிவர் முடிவெடுத்தது. இதையடுத்து அப்போதே தனியாக ஒரு குழு அமைத்து, ஐஸ்கிரீம் வணிகத்தை மேம்படுத்துவது எப்படி என ஆராய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்துஸ்தான் யுனிலிவிர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு செப்டம்பர் 9 ஆம் தேதி புதிய யோசனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐஸ்கிரீம் வணிகத்தை தனியாக பிரிக்கலாம் என்ற அந்த முடிவால் தேசிய பங்குச்சந்தையில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பங்குகள் இதுவரை இல்லாத உச்சமாக ஒரு பங்கின் விலை 2,923 ரூபாயாக அதிகரித்துள்ளது. தனிநபர் சார்ந்த அழகு சாதனப் பொருட்கள், பாடி வாஷ், வீட்டு உபோயக பொருட்களில் இன்னும் புதுமைகளை புகுத்துவதே தங்கள் லட்சியம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பங்கின் விலை 3,200 ரூபாய் வரை கூட விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.