பள்ளி கல்வி பற்றி பேசிய நாராயண மூர்த்தி..
கசப்பான உண்மைகளை பளிச் என்று பேசுவதில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வித்தகர். இவர் அண்மையில் பெங்களூருவில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பெற்றோர் மட்டும் வீட்டில் டிவி பார்க்கும்போது, பிள்ளைகள் மட்டும் எப்படி படிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். சமூக வலைதளங்கள், மற்றும் பிற கவன சிதறல்கள் இருக்கும்போது மாணவர்கள் எப்படி கவனமுடன் படிக்க முடியும் என்றும் பேசியிருந்தார். தாமும் தனது மனைவி சுதாவும் தங்கள் குழந்தைகளான அக்சதா, ரோஹன் ஆகியோருடன் தினசரி 3.5மணி நேரம் படிப்பதற்காக செலவிடுவோம் என்று தெரிவித்தார். மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை தங்கள் குடும்பத்தில் அனைவரும் படிப்பதற்காக செலவிடுவோம் என்றும், இரவு உணவுக்கு பிறகு 9 மணி முதல் 11 மணி வரை மீண்டும் படிப்போம் என்றும் தெரிவித்தார். வீடுகளில் இத்தகைய ஒழுக்கம் நீண்டகாலம் கடைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இப்படி குழந்தைகளுடன் இணைந்து படிப்பதால் குழந்தைகளுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் பெற்றோரிடம் கேட்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார்தலைமைப்பண்பு பெற்றோரிடம் இருந்து தான் குழந்தைகளுக்கு வரும் என்றும் தெரிவித்தார். பெற்றோர் படம்பார்த்துக்கொண்டு குழந்தைகளை படிக்கச்சொன்னால் அந்த மாடல் வேலை செய்யாது என்றும் தெரிவித்தார். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்துகொண்டார், இதேபோல் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான சோரோகோவை நிறுவி அதில் தலைமை தொழுல்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.