தலைவலியாய் மாறிய உணவுப்பொருள் விலைவாசி உயர்வு
பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் , ஆனால் சில பகுதிகளை மேலும் ஆராயவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் அது தொடர்பான பாதிப்புகள் மூல பணவீக்கத்தை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பிரச்சனைகள், சமநிலையற்ற சந்தைகள், காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் பணவீக்கத்திற்கு முக்கிய பிரச்சனைகளாக ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. இவற்றை தவிர்த்துவிட்டால் இந்தியாவில் நிலையான வளர்ச்சி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. கிராமபுற வளர்ச்சி சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்கட்டமைப்புகளில் அரசின் மூலதன செலவினங்கள், முதலீடுகளை அதிகரிப்பதாகவும், விவசாயத்துறையில் பலம் ஏற்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. பணவீக்கம் சரிந்து வந்தாலும் மெதுவாகவும், சீரான ஒழுங்கு இல்லாமலும் சரிந்து வருகிறது. முக்கியமான பணவீக்கம் 3.1 என்ற அளவில் மே மாதம் இருந்தது. இது கடந்த 2012-க்கு பிறகு எட்டப்படும் மிகவும் குறைவான பணவீக்கம் என்றும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.