வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஏன்?
இந்தியாவில் அக்டோபர் மாதம் என்பது பண்டிகைகள் நிறைந்த மாதம். இந்த மாதங்களில் வணிகம் அதிகரிக்கும், பெரிய அளவில் முதலீடுகள் வழக்கமாக ஈர்க்கப்படும். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.
பெருந்தொற்று நேரமான மார்ச் 2020ஆம் ஆண்டில் கூட 7.9 பில்லியன் அளவுக்குத்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்தனர். தற்போது அந்த அளவையும் மிஞ்சி முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்த பணத்தின் அளவு என்பது இந்திய மதிப்பில் 83 ஆயிரம் கோடி ரூபாயாகும். அதில் பெரும்பாலானவை பரஸ்பர நிதி. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 4 விழுக்காடு அளவுக்கு இந்த மாதம் மட்டும் சரிந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி வரும் அதே நேரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை செய்துள்ளனர்.சீன சந்தைகளில் முதலீடுகள் அதிகரித்து, இந்திய சந்தையில் இருந்து பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று வருகின்றனர். சீனாவின் ஹாங்செங் பங்குச்சந்தை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14% உயர்ந்து வருகிறது. இதேபோல் சீனாவின் சிஎஸ்ஐ 300, 22%உயர்ந்துள்ளது. அதே நேரம் இந்திய பங்குச்சந்தைகள் 4 % சரிவை சந்தித்துள்ளன. சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக அண்மையில் அரசு பெரிய தொகையை நிதியாக அறிவித்ததால் அந்நாட்டில் சந்தைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள சூழலில், சீனாவுடனான வணிக யுத்தத்துக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பங்குகளின் மதிப்பு அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதும் முதலீட்டாளர்கள் வெளியேற முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் சற்று குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு இலக்கை அந்நிறுவனம் எட்டவில்லை என்பதே பிரதான காரணமாகும்.