9லட்சம் கோடி ரூபாய் இழப்பு..
இந்தியப்பங்குச்சந்தைகளில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமெனில் 9லட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை மும்பை பங்குச்சந்தை சந்தித்துள்ளது. சந்தை மூலதனத்தின் மதிப்பு 444.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தைகளுக்கு பின்னால் உள்ள காரணங்களை பார்க்கலாம்.. பல நிறுவனங்கள் தங்கள் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதில் மோசமான இரண்டாவது காலாண்டு முடிவுகள் சந்தையின் மீதான மதிப்பை குறைத்துவிட்டன. உலகளவில் நிலவிய சரிவு காரணமாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் நேற்று சரிவு காணப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான் நாட்டு பங்குச்சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி காணப்பட்டன. டாலரின் மதிப்பு உயர்வு, கடன்பத்திரங்கள் மீதான முதலீடுகள் அதிகளவில் குவிந்ததே இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிய பிரதான காரணமாக அமைந்திருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க அதிபர் தேர்தல் மிக மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் என்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் மட்டும் 88,244கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை வெளியே எடுத்துள்ளனர். அதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புகள் மங்கிக்கொண்டு வருவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.