உஷாரான வங்கிகள்..
இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் புதிய கிரிடிட் கார்டுகளை விநியோகிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்தியுள்ளன. அதிகரித்து வரும் விதிமீறல்கள் காரணமாக இந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, செப்டம்பரில் வெறும் 6.20லட்சம் கிரிடிட் கார்டுகள் மட்டுமே புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்ட்டில் 9.2லட்சம் கிரிடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற கடன் என்பதால் வங்கிகள் புதிய கிரிடிட் கார்டுகளை வழங்க தயக்கம் காட்டி வருகின்றனர். எனினும் புதிதாக கிரிடிட் கார்டுகளை வழங்குவதில் எச்டிஎப்சி நிறுவனமும் அதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நிறுவனங்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வருங்காலங்களில் இந்த புதிய கிரிடிட் கார்டுகளை தரும் எண்ணிக்கையை வங்கிகள் மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பரில் மட்டும் எச்டிஎப்சி புதிதாக 4.3லட்சம் கார்டுகளையும், பாரத ஸ்டேட் வங்கி 1.4லட்சம் கிரிடிட் கார்டுகளையும் வழங்கியுள்ளன. கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாத நபர்களின் விகிதம் 6 விழுக்காடாக உயர்ந்துள்ளதால் வங்கிகள் சற்று தயக்கம் காட்டி வருகின்றன. புதிய கிரிடிட் கார்டு விநியோகம் மட்டுமே குறைந்தாலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி 1.6விழுக்காடு அதிகம் செலவு செய்துள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட்டில் 1.69லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கிய மக்கள் செப்டம்பரில் 1.77லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை வாங்கியுள்ளனர். 2கே கிட்ஸ்தான் அதிகளவில் கிரிடிட் கார்டுகளை முழுமையாக பயன்படுத்திவிட்டு, பின்னர் பணத்தை கட்டமுடியாமல் திண்டாடுவதாக ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு நவம்பர் முதலே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.