புதிய சாதனை படைத்த யுபிஐ..
ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை நுட்பமான யுபிஐ, தொடர்ந்து புதுப்புது சாதனைகளை செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத புதிய உச்சபட்ச அளவு பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செய்யப்பட்டுள்ளன.
16.58பில்லியன் பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடந்திருப்பதாக தேசிய பணப்பரிவர்த்தனனைக் கழகமான என்பிசிஐ தெரிவித்தது. மொத்தம் 23.5லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அளவில் 10 விழுக்காடும், மதிப்பில் 14 விழுக்காடும் செப்டம்பரைவிட அதிகமாகும். ஒரு நாளில் யுபிஐ மூலம் மட்டும் 53கோடி முறை பணப்பரிவர்த்தனைகள் நடப்பதாகவும், ஒரு நாளின் யுபிஐ பணப்பரிவர்த்தனை மதிப்பு 75 ஆயிரத்து 801 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. யுபிஐ தவிர்த்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஐஎம்பிஎஸ் வகையில் பணம் செலுத்துவதும் அக்டோபரில் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆதாரை அடிப்படையாக கொண்ட பணம் வழங்கும் திட்டம் 26விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தாண்டின் முதல் பாதியில் இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனை வரம்பு 52விழுக்காடு அதிகரித்துள்ளது, இந்தியா படிப்படியாக டிஜிட்டல் துறைக்கு மாறி வருவதை இந்த எண்ணிக்கை காட்டுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க டெபிட் அட்டைகளில் பணத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 8விழுக்காடு சரிந்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பணத்தை பயன்படுத்தி ஆகஸ்ட்டில் 43 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் செப்டம்பரில் இது மேலும் குறைந்து 39,920 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம் கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்யும் எண்ணிக்கை டெப்டம்பரில் 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆகஸ்ட்டில் 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரிடிட் கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்த நிலையில், செப்டம்பரில் இது 1.76லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.