மீண்டும் வலியுறுத்திவரும் நாராயண மூர்த்தி..
இந்தியாவின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவுக்கு சென்ற அவர், இந்தியாவின் மிகவும் கலாசாரம் நிறைந்த பகுதி கொல்கத்தா என்றார். உலகின் வேறு எந்த நிறுவனத்தையும் தங்கள் நிறுவனம் ஒப்பிடாமல் தங்களுடன் மட்டுமே இன்போசிஸ் நிறுவனம் ஒப்பிடும் என்றார். இந்தியாவில் 80 கோடி பேர் இன்னும் இலவச ரேஷன் வாங்கி வருவதாகவும்,இதற்கு அர்த்தம் என்னவென்றால் 80 கோடி இந்தியர்கள் இன்னும் வறுமையில் இருக்கின்றனர் என்றார். இந்திய வர்த்தக சபையின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தாம் பாரிஸில் வேலை செய்து வந்தபோது தனது தந்தை இந்தியாவில் நேரு அரசு பற்றியும், சோசலிச கருத்துகள் பற்றியும் பேசியதாக கூறினார். அந்த காலகட்டத்தில் ஏழ்மையும், சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும் அப்போதே பேசியதாக நாராயணமூர்த்தி குறிப்பிட்டார். பாரிஸில் ரயில்கள் சரியான நேரத்தில் ஓடியதாக கூறிய அவர் அந்நாட்டில் கம்யூனிச தலைவர் ஒருவரை சந்தித்தபோது தொழில்முனைவுதான் ஏழ்மையை போக்கும் என்று சொன்னதை குறிப்பிட்டு பேசினார். நாட்டின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தொழில்முனைவோரின் பங்கு முக்கியமானது என்றும், இந்தியாவை பற்றி உலகின் மற்ற நாடுகள் பெருமையாக பேச வேண்டும் என்றால் இந்திய இளைஞர்கள் கடினமாக உழைக்கவேண்டியுள்ளதாகவும் கூறினார். மனித மான்புகள், மனித மதிப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் நாராயணமூர்த்தி கேட்டுக்கொண்டார்.